கந்து வட்டி கேட்டு மிரட்டல்; ஓய்வு பெற்ற அதிகாரி தற்கொலை

கந்து வட்டி கேட்டு மிரட்டியதால், ஓய்வு பெற்ற அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-01-12 23:28 GMT
குழித்துறை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் ஜான் (வயது 75). இவர் அரசு தொழில் வளர்ச்சி மையத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. ஜான் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு முந்திரி தொழிற்சாலை, விறகு கடை போன்றவை நடத்தினார். இந்த தொழில்களில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருவரிடம் இருந்து கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்த ஜான் நேற்று அதிகாலையில் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள விறகு கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஜானின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பு ஜான் எழுதி இருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்