சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்களுக்கு தலா 30 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்களுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-01-12 23:15 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை தெருவை சேர்ந்த கார்த்தி என்பவரின் மகன் அஸ்வின் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வினோத் (27). இவர்கள் இருவரும் கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29–ந் தேதி இரவு சுமார் 7 மணியளவில் டியூசன் சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிய 14 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று எடப்பாளையம் பகுதியில் பைபாஸ் சாலையின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

மேலும் அவர்கள் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.

அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியுடன் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அஸ்வினையும், வினோத்தையும் கைது செய்து ஆட்டோவில் அழைத்து வந்தனர். அப்போது இருவரையும் கொலை செய்வதற்காக சிலர் ஆட்டோ மீது பெட்ரோல் குண்டும் வீசினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார். சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தது நிரூபிக்கப்பட்டதால் நேற்று நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில் முதல் குற்றவாளியான அஸ்வினுக்கு 30 ஆண்டுகள் 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் 2–ம் குற்றவாளியான வினோத்துக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

பின்னர் அஸ்வினையும், வினோத்தையும் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

மேலும் செய்திகள்