அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஏழைகளும் மஞ்சள் நிற ரே‌ஷன்கார்டு வைத்துள்ளதால் அனைத்து ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-01-12 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் தனது அதிகார வெறியால் அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்து கொண்டிருக்கும் கவர்னர் கிரண்பெடிக்கு தமிழக அரசு நிர்வாகம் பற்றி குறைகூற எந்த அருகதையும் இல்லை. தமிழக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அளித்து வரும் இலவச திட்டங்கள் பற்றி தேவையற்ற முறையில் தனது தகுதி என்ன என்பதைக்கூட அறியாமல் தமிழக அரசைப்பற்றி விமர்சனம் செய்துள்ளார்.

அவரது செயல்பாட்டை புதுவை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அவர் தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைப்பற்றி கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அதாவது ஒட்டுமொத்த தமிழ் சமுதாய பெண்களை கொச்சைப்படுத்தி உள்ளார். இதற்கு தமிழ் சமுதாய அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கவேண்டும். கவர்னர் கிரண்பெடிக்கு நாவடக்கம் தேவை. தமிழ் பெண்களை கேவலப்படுத்தி பேசினால் அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம்.

புதுவை மாநிலத்தில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 23 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் சுமார் 1.59 லட்சம் பேர் மஞ்சள்நிற கார்டுகளும், 1.51 லட்சம் பேர் சிவப்பு நிற ரே‌ஷன்கார்டுகளும், மீதமுள்ளவர்கள் மிகமிக வறுமைக்கோட்டிற்கும் கீழும் உள்ளனர். இதன்படி 1.80 லட்சம் ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு இலவச துணிமணிகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது துணிக்கு பதிலாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்கப்படுகிறது. ஆனால் பிற சமுதாயத்தினருக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.750 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.

கடந்த ஜூன் மாதத்துக்கான இலவச அரிசியை இப்போது கொடுக்கிறார்கள். அதிலும் சிவப்பு நிற ரே‌ஷன்கார்டுகளுக்கு 20 கிலோவும், மஞ்சள் ரே‌ஷன்கார்டுகளுக்கு 10 கிலோவும் வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பலரிடமும் இப்போது மஞ்சள் கார்டு உள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்