தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயத்துக்கு தயாராகும் காளைகள்

தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்க காளைகள் தயாராகி வருகின்றன. இந்த காளைகளுக்கு குளத்தில் நீச்சல் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-01-11 23:13 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இந்த பகுதியில் நடைபெறும் மாட்டு வண்டி போட்டி சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த போட்டிக்காக விவசாயிகள் காளை மாடுகளை தயார் படுத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று மாட்டு வண்டி போட்டி(ரேக்ளாரேஸ்) நடத்தி உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளுக்கு கோர்ட்டு தடை விதித்ததால், செக்காரக்குடியில் பந்தய மாடுகள் களையிழந்தன. தற்போது, ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டி நடத்துவதற்கான அனுமதி கிடைத்து இருப்பதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவர்கள் பந்தயத்துக்கு மாடுகளை தயார் செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போட்டிக்காக மாடுகளை தயார் செய்து வருகிறோம். போட்டியில் பங்கேற்கும் மாடுகளை தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுகிறோம். மேலும், அந்த மாடுகளுக்கு குளத்தில் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கு தினமும் தொடர்ந்து உளுந்து கரைசல் வழங்கப்படுகிறது. அதன்பிறகு உளுந்து, புண்ணாக்கு, பேரீட்சம்பழம் உணவாக கொடுக்கப்படுகிறது. தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டையும், மாடு ஓடும் போது, கால் வலிமையாக இருப்பதற்காக ஆட்டுக்கால் சூப் வழங்கி வருகிறோம். தினமும் வண்டியில் பூட்டி இந்த காளைகளுக்கு ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.


மேலும் செய்திகள்