12–ம் வகுப்பு மாணவர் கைது ரூ.500–க்காக கொலை செய்ய வந்தவர்
சிவசேனா முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில், ரூ.500–க்காக கொலை செய்ய வந்த புனேயை சேர்ந்த 12–ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை காந்திவிலி சம்ந்தா நகரை சேர்ந்த சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அசோக் சாவந்த். கடந்த சில தினங்களுக்கு முன் இவரை ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கத்தியால் குத்தியும், வாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக சம்ந்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய சோகைல் தோதியா, கணேஷ் ஜோக்தண்ட் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் புனேயை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் புனே விரைந்து சென்று அந்த மாணவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், கைதான மாணவர் அங்குள்ள ஜூனியர் கல்லூரியில் 12–ம் வகுப்பு படித்து வருவதும், அசோக் சாவந்தை கொல்வதற்கு அவருக்கு முன்பணமாக ரூ.500 கொடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
கொலை செய்த பின்னர் அவருக்கு பெரிய தொகை தருவதாக இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜக்தீஷ் பவார் என்பவர் கூறியுள்ளார்.
ஜக்தீஷ் பவார் தான் முதலில் ஆட்டோவில் இருந்து இறங்கி அசோக் சாவந்தை கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின்னர் மாணவரும், இன்னொருவரும் சேர்ந்து வாளால் அசோக் சாவந்தை சரமாரியாக வெட்டியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவரின் வீட்டில் இருந்து ரத்தக்கறை படிந்த ஒரு ஆடையையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவர் சிறுவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, டோங்கிரி சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த கொலையில் தலைமறைவாக உள்ள ஜக்தீஷ் பவார் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.