8-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்

திண்டுக்கல்லில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து 8-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-01-11 23:00 GMT
திண்டுக்கல்,

நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4-ந்தேதி முதல் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

தொடர்ந்து 8-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பதால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் நேற்றும் தனியார் பஸ்களே அதிக அளவு இயக்கப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை, வேடசந்தூர், வத்தலக்குண்டு, நத்தம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன.

குறிப்பாக கொடைக்கானலுக்கு ஒரு சில பஸ்களே இயக் கப்பட்டன. இதனால் கொடைக்கானலுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தனர். கொடைக்கானலுக்கு இயக்கப்படும் பஸ் வந்ததும் அதில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். வெளியூர்களில் பணிபுரிவோர் பொங்கல் பண்டிகைக்காக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்தநிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (வெள்ளிக் கிழமை) தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மண்டலத்தில் சுமார் 600 தற்காலிக டிரைவர் கள் மற்றும் கண்டக்டர் களை வைத்து தான் அதிக அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு கண்டக்டர் கள், எவ்வளவு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது? என்று குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு முறை ரசீதில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் தற்காலிக கண்டக்டர்கள் பதிவு செய்வதில்லை. மேலும் அவர்கள் பணம் வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கிறார்களா? என்றும் தெரிவதில்லை. இதனால், ஓரளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்