விலை வீழ்ச்சி காரணமாக அறுவடை செய்யப்படாத மக்காச்சோளம் விவசாயிகள் கவலை

மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கன்னிவாடி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படாமல் உள்ளன.

Update: 2018-01-11 22:45 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை தலை விரித்தாடியது. குடங் களை தூக்கி கொண்டு குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்தனர். விவசாயம் பொய்த்து போனதால் பலரும் மாற்றுத் தொழிலை தேடி சென்றனர்.

கடந்த ஆண்டு வருணபகவான் கருணை காட்டியதால் பரவலாக மழை பெய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தொடங்கினர். குறிப்பாக கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி, சில்வார்பட்டி, காமாட்சிபுரம், ஸ்ரீராமபுரம், மூலச்சத்திரம், செம்மடைப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மானாவாரியாக மக்காளச்சோளம் சாகுபடி செய்தனர்.

விலை குறைவு

கடந்த ஆண்டு 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2 ஆயிரம் வரை விலை போனது. இதனால் விவசாயிகளுக்கு ஒரளவு லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.1,000 வரையே விலை கிடைக்கிறது. செலவு செய்த கூலி கூட கிடைக்கப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது நன்கு விளைந்து மக்காச்சோளம் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்றன. ஆனால் விலை குறைந்ததால் ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெறாமல் செடியிலேயே மக்காச்சோளம் காய்ந்து வருகின்றன. போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மக்காச்சோளத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாது. ஒரு மாத காலத்தில் விற்பனை செய்யாவிட்டால் பூச்சி அரித்து போய் விடும். இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் மக்காச்சோளத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்