அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

சுவாமியார்மடம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-01-11 22:45 GMT
குழித்துறை,

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் விபத்துகளில் சிக்குவதும், பஸ்மீது கல்வீசும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டி சென்றார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

கல்வீச்சு

அந்த பஸ் சுவாமியார்மடம் அருகே சென்ற போது, மர்ம நபர் ஒருவர் பஸ் மீது கல்வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, டிரைவர் பஸ்சை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பஸ் மீது கல்வீசிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்