அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-01-11 23:00 GMT
உடுமலை,

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி இரவு முதல் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தவிர மற்ற தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.

அதே சமயம் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. நேற்று அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்த நிலையில், தற்காலிக தொழிலாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழகத்தில் மொத்தம் 104 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று மதியம் 75 பஸ்கள் இயக்கப்பட்டன. கூடுதல் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் ஓடின. அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பஸ்கள் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கால அட்டவணைப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படவில்லை.

இதற்கிடையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவாக உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு மத்திய தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போலீசார் குவிப்பு

இதில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகமாணிக்கம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் வி.சவுந்திரராஜன், எல்.பி.எப். போக்குவரத்துக்கழக தொழிற்சங்க மண்டல செயலாளர் துரைசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஐ.என்.டி.யூ.சி. ஜஹாங்கீர் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்