அரசு பஸ்சில் பணியில் இருந்த தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு போலீசார் விசாரணை

குறிஞ்சிப்பாடியில் அரசு பஸ்சில் பணியில் இருந்த தற்காலிக கண்டக்டர் திடீரென இறந்தார். அவர் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-01-11 23:00 GMT
குறிஞ்சிப்பாடி,

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்களை கொண்டு குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றும் குறைந்த அளவிலேயே மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பஸ்சில் தற்காலிக கண்டக்டராக பணியாற்றி வந்த ஒருவர் திடீரென இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

வடலூர் புதுநகரை சேர்ந்தவர் நஜ்புதின் (வயது 38) லாரி டிரைவர். இவர் நேற்று குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பஸ்சில் தற்காலிக கண்டக்டராக பணியாற்றி வந்தார். குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே சென்றபோது, பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டு இருந்த நஜ்புதின் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது அந்த பஸ்சில் தற்காலிக டிரைவராக பணியாற்றியவர் உடனே பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். தொடர்ந்து நஜ்புதினுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை பயணிகள் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நஜ்புதின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரடைப்பால் நஜ்புதின் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்