கைக்கெடிகாரம், ஸ்பீக்கரில் மறைத்து துபாய், இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாய், இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-01-10 23:48 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாய் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த சையத் இப்ரகீம் குத்துஸ் (வயது 37) என்பவர் வந்தார்.

அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்பீக்கர் பெட்டி ஒன்று இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர்.

அப்போது அதில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 750 கிராம் தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சையத் இப்ரகீம் குத்துசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த இஸ்மாயில் இப்ரகீம் (47) என்பவரின் கைக்கெடிகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 132 கிராம் தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இஸ்மாயில் இப்ரகீமிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்