பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யும்போது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
‘பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யும்போது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்‘ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வெற்றிலைமுறியன்பட்டியை சேர்ந்த கந்தசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘என்னுடைய வீட்டின் முன்பகுதியில் மாடுகளுக்கான தண்ணீர் தொட்டி கட்டி ஆக்கிரமித்துள்ளதாக காரியாபட்டி வருவாய் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,‘ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
அரசு புறம்போக்கு நிலத்திலும், பாதையிலும் சிலர் கட்டுமான பணிகள் மேற்கொண்டுள்ளதாக மனுதாரர் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மனுதாரர் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மனுதாரரும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதை எதிர்த்து மனுதாரர் இந்த கோர்ட்டை நாடி உள்ளார்.
மனுதாரர் தூய்மையான கரத்துடன் கோர்ட்டை நாடவில்லை. இதுபோன்ற மனுக்களால் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற முடியாத நிலை ஏற்படும்.
எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனுமதியற்ற கட்டுமானம் தொடர்பாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட மனுதாரர் எந்த ஆக்கிரமிப்பிலும், அனுமதியற்ற கட்டுமானத்திலும் ஈடுபடவில்லை என்பதை மனுவில் குறிப்பிட்டு இருப்பதையும், ஆக்கிரமிப்புகள், அனுமதியற்ற கட்டுமானம் தொடர்பான புகைப்படங்களையும் இணைத்திருக்க வேண்டும்.
இதேபோல கற்பனையான நபர்களின் பெயரில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்க, பொதுநல மனு தாக்கலாகும்போது மனு ஆவண பட்டியலில் மனுதாரரின் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். ஆதார் இல்லாதவர்கள் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதை பதிவுத்துறை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.