3 பேர் தற்கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

வாசுதேவநல்லூர் அருகே 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-01-10 21:15 GMT

வாசுதேவநல்லூர் அருகே 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

திடுக்கிடும் தகவல்கள்

தபால் அதிகாரி சொர்ணம் தன்னுடைய தாய், தங்கையுடன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–

பழனி தனது குடும்பத்துடன் அம்பை அருகே உள்ள பொத்தையில் வசித்து வந்தார். அவருடைய மூத்த மகள் சொர்ணத்துக்கு வாசுதேவநல்லூர் அருகே பனையூரில் தபால் அதிகாரியாக பணி கிடைத்தது. இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சங்குபுரத்துக்கு குடியேறினார். பனையூரில் 2 ஆண்டுகள் வேலை பார்த்தார். அதன்பிறகு சங்குபுரத்துக்கு மாறுதலானார். தற்போது சங்குபுரத்தில் தபால் அதிகாரியாக சொர்ணம் பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ஆண்களுக்கு முன்பு பழனி இறந்து விட்டார். 2–வது மகள் பத்மா, பிளஸ்–2 படித்துவிட்டு, தற்போது தட்டச்சு பயிற்சிக்கு சென்று வந்தார்.

கண்டக்டருடன் காதல்

சொர்ணம் பனையூரில் வேலை பார்த்தபோது அதே ஊர் குருநாதர் கோவில் தெருவை சேர்ந்த குருவையா மகன் தனியார் பஸ் கண்டக்டர் வேல்சாமி (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இரு வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர். இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இதற்கிடையே வேல்சாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். அவர் வெளியூருக்கு சென்றாலும் இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். வேல்சாமி ஊருக்கு வரும்போதெல்லாம் சொர்ணத்தை பார்த்து பேசி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வேறொரு பெண்ணுடன் தொடர்பு

இதற்கிடையே வேல்ச்சாமிக்கும், சொர்ணத்துக்கும் திருமணம் செய்ய நினைத்து இருவீட்டாரும் பேசி முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொர்ணத்துக்கும், வேல்சாமிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு வேல்சாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அறிந்த சொர்ணம், வேல்சாமியிடம் செல்போனில் பேச முயன்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சொர்ணம் மனவேதனை அடைந்தார். இந்த விவரம் ஊருக்குள் தெரிந்தால் அவமானமாகி விடுமே என்று நினைத்தார். வேல்சாமி பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை.

மனவேதனையில் தற்கொலை

இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் சொர்ணம் குடும்பத்தினர் திகைத்தனர். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று 3 பேரும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு சொர்ணம், தன்னுடைய தாய்– தங்கையுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்கொலைக்கு காரணமான வேல்சாமி எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்