சாக்கடை கால்வாயில் விழுந்து 2½ வயது சிறுமி பலி

பெங்களூருவில் நேற்று சாக்கடை கால்வாயில் விழுந்து 2½ வயது சிறுமி பலியானாள். சிறுமியின் குடும்பத்துக்கு மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-01-09 23:52 GMT
பெங்களூரு,

கலபுரகியை சேர்ந்தவர் சவண்ணா. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் தனுஸ்ரீ (வயது 2½). சவண்ணா தனது குடும்பத்துடன் பெங்களூரு தொட்டபொம்மசந்திரா அருகே கூடாரம் அமைத்து வசித்து வருகிறார். சவண்ணா தனது மனைவியுடன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலையில் தனுஸ்ரீ கூடாரத்தின் அருகே உள்ள சாக்கடை கால்வாயின் அருகே விளையாடி கொண்டு இருந்தாள். அந்த சாக்கடை கால்வாயின் மேல்புறம் மூடப்படவில்லை. அப்போது, எதிர்பாராத விதமாக தனுஸ்ரீ சாக்கடை கால்வாயின் உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானாள்.

இந்த நிலையில், விளையாடி கொண்டு இருந்த தனுஸ்ரீ மாயமானதால் அவளை பெற்றோர் தேடினார்கள். அப்போது, சாக்கடை கால்வாயின் உள்ளே விழுந்து அவள் இறந்திருப்பது தெரியவந்தது. தனுஸ்ரீயின் உடலை பார்த்து அவளுடைய பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வித்யாரண்யபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதி ஆகியோர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். அத்துடன், மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் மேயர் சம்பத்ராஜ் கூறினார். அத்துடன் சாக்கடை கால்வாயை சுற்றி தடுப்புகள் அமைக்க தவறியதாக மாநகராட்சி என்ஜினீயர் நாகராஜை பணி இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

சாக்கடை கால்வாயில் விழுந்து 2½ வயது சிறுமி இறந்த சம்பவம் நேற்று தொட்டபொம்மசந்திரா பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்