ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
இறந்துபோன ரேஷன் கடை ஊழியர் குடும்பத்தினருக்கு வைப்புநிதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் ஸ்ரீபெரும்புதூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனராக பாலகிருஷ்ணன் (வயது 57) என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் 60–க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஒரு ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்த நாகராஜ் என்பவர் கடந்த 2014–ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து தனது தந்தையின் வைப்பு தொகை ரூ.2 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று நாகராஜின் மகன் சரண்ராஜ் (29) பாலகிருஷ்ணனிடம் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் வைப்பு தொகை ரூ.2 லட்சம் வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனவும், முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சரண்ராஜ் இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சரண்ராஜிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்தை பாலகிருஷ்ணன் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.