மும்பையில் கடும் குளிர் பொது மக்கள் அவதி
மும்பையில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மும்பை,
மும்பையில் தற்போது குளிர் காலம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் குளிரை தாங்கமுடியாமல் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். இதேபோல அதிகாலை, இரவு நேரத்தில் வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகாலை நேரங்களில் நகர் முழுவதும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொறுமையாகவே வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது:–
கடும் பனியால் அதிகாலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவதில்லை. எனவே நாங்கள் முகப்பு விளக்கை போட்டு மெதுவாகவே செல்கிறோம். வாகனங்கள் மெதுவாக செல்வதால் அதிகாலை நேரத்தில் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மும்பையில் காற்று மாசும் அதிகரித்து உள்ளது. இதனாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ வடக்கில் இருந்து வேகமாக காற்று வீசுவதால் மும்பையில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கும் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குளிரின் தாக்கம் குறையும் ’’ என்றார்.