போராட்டம் எதிரொலி: தனியார் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் பயணிகள்

தமிழக அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் எதிரொலியாக தனியார் பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

Update: 2018-01-09 23:15 GMT

புதுச்சேரி,

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது.

பஸ் ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் புதுவையிலிருந்து சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் கட்டணமாக ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே தமிழக அரசு பஸ்களும் தற்போது ஓரளவு இயங்க தொடங்கியுள்ளன. குறிப்பாக தற்காலிக டிரைவர்களை கொண்டு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.

இதனால் தமிழக அரசு பஸ்களை கண்டாலே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டணம் அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் என கருதி தனியார் பஸ்களிலேயே பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். அதேபோல் புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழக பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பக்தவச்சலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துரை, தொ.மு.க. அன்னஅடைக்கலம், மாணிக்கம், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்