கொளத்தூர் அருகே பெண் கொலை வழக்கு: ‘‘நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றேன்’’ கைதான கட்டிட தொழிலாளி வாக்குமூலம்

கொளத்தூர் அருகே ‘‘நடத்தையில் சந்தேகப்பட்டு தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்றேன்‘‘ என்று கைதான கட்டிட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-01-09 22:15 GMT

கொளத்தூர்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அணைமேடு காலனியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மோனிஷா (32). இவர்களுக்கு கிஷோர் (7), சஞ்சனா (5), சபர்ணா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக்கொண்டு மோனிஷா தனது குழந்தைகளுடன் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அண்ணாநகரில் உள்ள தனது தந்தை குப்புசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் சமாதானம் செய்து மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பண்ணவாடி நோக்கி சென்றார். வழியில் தொரலிகுண்டுகரடு அருகே சென்றபோது கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதேஸ் தனது குழந்தைகள் கண் முன்னே மோனிஷாவை கீழே தள்ளி, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் தப்பிச்சென்ற மாதேசை நேற்று பிடித்து கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாதேஸ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

எனது மனைவி மோனிஷாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் என்னிடம் கோபித்துக்கொண்டு மோனிஷா குழந்தைகளுடன் கொளத்தூர் அண்ணாநகரில் உள்ள அவளது தந்தை வீட்டிற்கு சென்று விட்டாள்.

சம்பவத்தன்று அங்கு சென்ற நான் எனது மாமனார் மற்றும் மனைவியை சமாதானம் செய்தேன். பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களை அழைத்துக்கொண்டு பண்ணவாடி நோக்கி சென்றேன். வழியில் அவளுக்கும், எனக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மோனிஷாவை கீழே தள்ளி தலையில் கல்லைப்போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். ஆனால், போலீசார் என்னை பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கைதான மாதேசை போலீசார் மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்