கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு தாய்–மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தாய்– மகள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-09 23:15 GMT

மதுரை,

மதுரை பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் ராமலிங்கத்தின் மனைவி மீனாட்சி (வயது 41). மகள் நர்மதா ஆகிய இருவரும் நேற்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். வளாகத்தில் நின்று கொண்டிருந்த அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தங்களது உடல்களில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகளை பறித்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மீனாட்சி கூறுகையில், எனது கணவர் ராமலிங்கத்துக்குச் சொந்தமாக பைக்காராவில் 4 சென்ட் நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நான் எனது மகளுடன் அந்த இடத்தில் குடியேறச் சென்றேன். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் எங்களை தரக்குறைவாக பேசியதோடு கொலை செய்ய முயன்றார்.

இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ள வில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தனது மகளுடன் தீக்குளிக்க முயன்றதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்