ஆற்காடு அருகே ஆசிரியை வீட்டுக்கு அனுப்பியதால் 10–ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
ஆசிரியை வீட்டுக்கு அனுப்பியதால் 10–ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு,
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே ரத்தினகிரியை அடுத்துள்ள மேலகுப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை 231 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆசிரிய, ஆசிரியைகள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் இதே ஊரைச்சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 15) 10–ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தந்தை முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாயார் சின்னப்பொண்ணு கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். வழக்கமாக பள்ளி திறப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே சுந்தரமூர்த்தி பள்ளிக்கு சென்று விடுவான்.
அதன்படி நேற்று காலை வழக்கம்போல் சுந்தரமூர்த்தி பள்ளிக்கு சென்றான். அங்கு அவனுடன் படிக்கும் கார்த்திக்குடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கார்த்திக் திடீரென கீழே விழுந்ததில் காயம் அடைந்தான். உடனடியாக அவனை ஆசிரியர்கள் ஆற்காட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து வகுப்பு ஆசிரியை கவிதா, மாணவன் சுந்தரமூர்த்தியிடம் விசாரித்து ‘உனது தாயாரை அழைத்துக்கொண்டு வா’ என கூறி வகுப்பிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். கார்த்திக் கீழே விழுந்ததற்கு தனக்கு தண்டனை கொடுத்து விடுவார்களோ? என பயந்துகொண்டே அவன் வீட்டுக்கு சென்றான். அப்போது தாயார் சின்னப்பொண்ணு வேலைக்கு சென்று விட்டார். வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற அவன் உள்புறமாக கதவை தாழிட்டுக்கொண்ட நிலையில் கூரையின் மீதுள்ள கம்பியில் துண்டை(டவல்) கட்டிக்கொண்டு தூக்குப் போட்டு தொங்கினான்.
பள்ளியிலிருந்து வீட்டுக்கு சென்ற அவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஆசிரியை கவிதா, மற்றொரு மாணவன் பிரசாத்தை அவனது வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு வருமாறு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சுந்தரமூர்த்தி வீட்டுக்கு பிரசாத் சென்றபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பிரசாத் உள்ளே பார்த்தான். அப்போது சுந்தரமூர்த்தி ஒரு டவலில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். உடனடியாக பள்ளிக்கு வந்து ஆசிரியை கவிதாவிடம் தெரிவித்தான். அது குறித்து தலைமைஆசிரியர் ஹேமச்சந்திரனுக்கு கவிதா தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சுந்தரமூர்த்தி வீட்டுக்கு வந்தனர். மாணவனின் தாயார் சின்னப்பொண்ணுவுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
அவர்கள் சுந்தரமூர்த்தியை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலை பார்த்து தாய் சின்னப்பொண்ணு கதறி அழுதார்.
இதனையடுத்து போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் தலைமைஆசிரியர் ஹேமச்சந்திரன் மற்றும் வகுப்பு ஆசிரியை கவிதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிரியை வீட்டுக்கு அனுப்பியதால் பயந்துபோன மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் வேறு ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.