அலமேலுரங்காபுரத்தில் மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
அலமேலுரங்காபுரத்தில் உள்ள விழுப்புரம் மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 6–வது நாளாக போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் தொழிற்சங்கத்தினர் நேற்று அலமேலுரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் உடன் அழைத்து வந்தனர். குழந்தைகள், பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். காலை முதல் போராட்ட களத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வரத்தொடங்கினர். காலை 10.30 மணிஅளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து கழக சர்வீஸ் சாலையில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர். மேலும் சாலை தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. நிர்வாக பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொது செயலாளர் பரசுராமன் உள்பட தொழிற்சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. பொருளாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.
போராட்டம் குறித்து தொ.மு.ச. நிர்வாக பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:–
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கஷ்டங்களை அரசுக்கு எடுத்துரைக்கும் விதமாக இன்று (நேற்று) எங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் எங்கள் சொத்து. நாங்கள் அதை சேதப்படுத்துவதாக கூறுகின்றனர். எங்கள் சொத்தை நாங்கள் சேதப்படுத்த மாட்டோம். சில சமூக விரோதிகள் எங்கள் மீது பழிபோடும் விதமாக இச்செயல்களில் ஈடுபடுகின்றனர். எங்களது போராட்டம் அறப்போராட்டம் ஆகும். அரசு பஸ்களை சேதப்படுத்துவதாக அரசு எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் மனைவிகள் கூறுகையில், எங்களது கணவர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கின்றனர். அவர்கள் கேட்டும் அடிப்படை ஊதிய உயர்வை அரசு தர மறுப்பது வேதனைக்குரியதாகும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
போராட்டத்தை முன்னிட்டு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில், இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் ஏராளமான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சட்டம் ஒழுங்கை மீறினால் கைது செய்வதற்கு தயாராக 10 போலீஸ் வேன்கள் சர்வீஸ் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.