விருப்பம் இல்லாமல் 2–வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

விருப்பம் இல்லாமல் 2–வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் திருப்பூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவதாக வாலிபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-09 23:00 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த அம்மன்நகர் பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் உள்ளது. நேற்று காலை வாலிபர் ஒருவர் அந்த மின்கோபுரத்தின் உச்சியில் ஏறி கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவர் கோபுரத்தின் உச்சி பகுதிக்கு சென்று அங்கு அமர்ந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். பின்னர் கோபுரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்த வாலிபரிடம் ஒலிபெருக்கி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் கீழே குதித்து விடுவதுபோல் சைகையில் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு அந்த வாலிபர் கீழே இறங்கி வர சம்மதித்தார்.

இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரி முரளி மின் கோபுரத்தின் மேலே ஏறி அந்த வாலிபரை பத்திரமாக கீழே அழைத்து வந்தார். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் செல்வம் (வயது 25) என்பதும், திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகருக்கு வந்து, உறவினர் வீட்டில் தங்கி இருந்து, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் அவருக்கு ஊரில், 2–வது திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. திருமண தேதியும் குறிக்கப்பட்டு விட்டது. ஆனால் செல்வத்திற்கு 2–வது திருமணம் செய்ய விருப்பம் இல்லை. இவருடைய விருப்பத்திற்கு மாறாக 2–வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. மேலும் நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தின் போது செல்வம் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து செல்வத்தை கடுமையாக எச்சரித்த போலீசார் அவரை அவருடைய உறவினர் சரவணன் என்பவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்