6–வது நாளாக வேலை நிறுத்தம்: பஸ் நிலையத்தில் தாறுமாறாக பஸ்களை நிறுத்திய தற்காலிக டிரைவர்கள்
6–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தில் தினக்கூலி டிரைவர்கள் தாறுமாறாக பஸ்களை நிறுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டது.
பொள்ளாச்சி,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் கடந்த 6–வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினருடன், தினக்கூலி அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் கோவை, பழனி, உடுமலை, திருப்பூருக்கு அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகிறது. வால்பாறை, ஆனைமலை, வடக்கிபாளையம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் கடும் அவதிபட்டனர். கிராமங்களில் இருந்து மாணவ–மாணவிகள் பள்ளிக்கு ஆட்டோ பிடித்து வந்தனர்.
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் காத்திருந்து பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களை நிறுத்தி வைக்க, ஒவ்வொரு பஸ்சுக்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தினக்கூலி அடிப்படையில் பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு பஸ் நிலையத்தில் பஸ்களை எப்படி நிறுத்துவது? என்று தெரியவில்லை. தாறுமாறாக பஸ்களை நிறுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் பழைய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து பஸ்ளை ஒன்றன் பின், ஒன்றாக நகர்த்திய பிறகு, நெருக்கடி சீரானது. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன் கோவை மண்டல பஸ்கள் இயக்க ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள டிரைவர், கண்டக்டர்கள் தற்காலிக பணிக்கு வர கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிப்பு பேனர் வைத்திருந்தனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:–
பொள்ளாச்சி, வால்பாறை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 234 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று 229 பஸ்கள் ஓடின. அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 468 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் 283 பேர் பணிக்கு வரவில்லை. அவர்களுக்கு பதிலாக 285 பேர் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்பிறகு நேற்று 23 பேர் பணிக்கு வந்துள்ளனர்.
வால்பாறைக்கு செல்லும் சாலை மலைப்பாதையாக இருப்பதால் வழக்கமாக செல்லும் டிரைவர்கள் வரும் வரை பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் காலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு வால்பாறைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோன்று ஆனைமலை, ஆழியாறு ஆகிய பகுதிகளுக்கு போதுமான அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் டிரைவர்களுக்கு எந்த இடத்தில் பஸ்சை நிறுத்துவது என்பது தெரியவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.