நெல்லை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா 300 பேர் கைது
நெல்லை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளர்கள் போராட்டம்தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. இதையொட்டி நெல்லையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பணிக்கு வரவில்லை. அ.தி.மு.க. சார்ந்த அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் வழக்கம் போல் நேற்று பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக 40 முதல் 50 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று கூடுதலாக தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. 60 முதல் 70 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இருந்த போதிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ–மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதிய அளவில் பஸ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
குடும்பத்துடன் தர்ணாஇந்த நிலையில் நேற்று பிற்பகல் அனைத்து அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடந்தது. தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். நாற்காலியில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்துக்கு தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. சம்மேளன துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் முருகேசன், முருகன், காமராஜ், ஜோதி, உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
225 பேர் கைதுஇதைதொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வேன்களில் ஏற்றி கொக்கிரகுளத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொழிலாளர்கள் 300 பேரை மட்டும் கைது செய்து அடைத்து வைத்தனர். தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண்களை போலீசார் கைது உடனடியாக விடுவித்தனர்.