தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-09 21:15 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலைநிறுத்தம்

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பஸ் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் தனியார் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல நடத்துநர்களுக்கு எந்த ஊருக்கு எவ்வளவு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இதனால் பயணிகளிடம் கேட்டு கேட்டு டிக்கெட் கொடுத்து வருகின்றனர். தூத்துக்குடி–நெல்லை இடையே கூடுதல் கட்டணத்துடன் இடைநில்லா பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்கிறது. இதனால் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பயணிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் கிராமங்களில் இருந்து மக்கள் தூத்துக்குடிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தற்போது கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொங்கல் பொருட்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. செயலாளர் பிச்சைமணி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சம்பள உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தலைவர் முருகேசன், பொருளாளர் லூர்துஅந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் முத்துராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்