மின்சார ரெயில் வாசலில் நின்று பயணித்த வங்கி பெண் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு

மின்சார ரெயில் வாசலில் நின்று பயணம் செய்தபோது, வங்கி பெண் ஊழியரை தாக்கி செல்போன் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-01-09 00:00 GMT

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் பிரியங்கா(வயது 20). இவர் சம்பவத்தன்று வங்கியில் கடன் வாங்கியவரிடம் பணத்தை வசூல் செய்ய மாகிம் சென்று இருந்தார். பின்னர் மாலை 7 மணியளவில் அவர் மாகிமில் இருந்து வங்கிக்கு மின்சார ரெயிலில் சென்றார்.

வில்லேபார்லேயை தாண்டிய பிறகு பிரியங்கா இறங்குவதற்காக ரெயில் வாசல் அருகே வந்து நின்றார். அப்போது, அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. எனவே அவர் செல்போனை எடுத்து பேசினார்.

இந்தநிலையில் தண்டவாள ஓரம் உள்ள கம்பத்தில் நின்ற மர்ம ஆசாமி ஒருவன், திடீரென நீண்ட கம்பால் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பிரியங்காவின் கையில் ஓங்கி அடித்தான். இதில், அவரது கையில் இருந்த செல்போன் நழுவி கீழே விழுந்தது. அவரும் நிலை தடுமாறினார். எனினும் மற்றொரு கையால் அவர் மின்சார ரெயில் கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டதால் கீழே விழாமல் தப்பினார். இதற்கிடையே மர்ம ஆசாமி பிரியங்காவின் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிஓடினார். மர்ம ஆசாமி தாக்கியதில் பிரியங்காவின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் அந்தேரி சென்றவுடன் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அந்தேரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி பெண் ஊழியரை தாக்கி செல்போனை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்