போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தற்காலிக பணியாளர்களால் பஸ்கள் இயக்கம்

5-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தஞ்சையில் தற்காலிக பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

Update: 2018-01-08 23:00 GMT
தஞ்சாவூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட 10 பணிமனைகளில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தையடுத்து தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் சீருடை அணியாமல் பணியாற்றினர். நேற்றும் தொடர்ந்து தற்காலிக பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. ஏறத்தாழ 50 சதவீத பஸ்கள் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் இயக்கப்பட்டன.

தஞ்சை பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் நேற்று பஸ்கள் போதிய அளவு இல்லாததால் பஸ்சுக்காக பயணிகள் பலமணி நேரம் காத்துக்கிடந்தனர். இனால் அவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர். அருகில் உள்ள ஊர்களுக்கு வேன்கள் மூலமும் பயணிகள் பயணம் செய்தனர். ரெயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளிலும் மொத்தம் உள்ள 501 பஸ்களில் நேற்று காலை 10மணி அளவில் 368 பஸ்கள் இயக்கப்பட்டன. 11 மணி அளவில் 406 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலை நிலவரப்படி 464 பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும் செய்திகள்