தடையை மீறிய தொழிற்சங்க தலைவர்கள் கைது: ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டு வந்த போக்குவரத்து தொழிலாளர்கள்

‘கோவையில், ஆர்ப்பாட்டம் நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். கைது செய்வோம்’ என்று போலீசார் எச்சரித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் தடையை மீறிய தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-08 22:45 GMT

கோவை,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு கோவையில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்றுக்காலை 10 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் 500 பேருக்கு மேல் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. அதை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம். எனவே கலைந்து சென்று விடுங்கள்’ என்று எச்சரித்தனர்.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் எச்சரித்தவாறு போலீசார் ஜீப்பில் சென்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக தனியார் பஸ்கள் மற்றும் போலீஸ் வேன்களும் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் (ஏ.ஐ.டி.யு.சி.) தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்க தலைவர்கள் ராஜாமணி, மனோகரன் (எச்.எம்.எஸ்.), கே.எம்.செல்வராஜ் (ஏ.ஐ.டியு.சி.) கிருஷ்ணமூர்த்தி (சி.ஐ.டி.யு.), பாலசுந்தரம், சிவராஜ் (ஐ.என்.டி.யு.சி.), ரத்தினவேல் (எல்.பி.எப்.), தியாகராஜன், கோவிந்தசாமி (எம்.எல்.எப்.) ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசுகையில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக் கொண்டு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை டாடாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்