குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாணார்பட்டி அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-08 21:45 GMT

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் உள்ளது அன்னமரெட்டிகுளம். 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நிரம்பினால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதுமட்டுமின்றி குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் குளம் வறண்டது.

இதை பயன்படுத்தி குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடுகள் கட்டினர். இந்தநிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின் பேரில் அந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

அப்போது குளத்தை ஆக்கிரமித்து 26 வீடுகள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதவிர செங்கல்சூளை மற்றும் கொய்யா, புளி, மா ஆகியவை வளர்க்கப்பட்டு 2 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன்பேரில் ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று சாணார்பட்டி ஒன்றிய கூடுதல் ஆணையாளர் மணிமுத்து தலைமையில் சாணார்பட்டி வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் தராமல் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.

பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பொங்கல் பண்டிகை வரை காலஅவகாசம் வழங்கப்படும். அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்