கணவர் குடிபோதையில் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
எண்ணூரில் கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ராமநாதபுரம் 10–வது தெருவில் வசித்து வருபவர் சேகர். துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி தாரா(வயது 26). இவர்களுக்கு 6 வயதில் 1 மகளும், 10 மாத ஆண் கைக்குழந்தையும் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான சேகர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
மேலும், குடும்பம் நடத்தவும் பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தாரா கணவர் வெளியே சென்றவுடன் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டினார். பின்பு பூட்டிய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் இறந்தது தெரியாமல் 2 குழந்தைகள் பசியால் அழுதனர். அவர்களது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தாராவின் தந்தை தேவசகாயத்திற்கு கொடுத்தனர். அவர் உடனடியாக வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது தாரா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றி எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.