விபத்தில் பள்ளி மாணவ–மாணவிகள் 3 பேர் பலி: டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
நம்புதாளை பகுதியில் லாரி மீது வேன்மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிக்கூடம் சென்ற சிறுவர்,சிறுமிகள் 3 பேர் பலியான வழக்கில் வேன் டிரைவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
திருவாடானை தாலுகா நம்புதாளை போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடைய மகன் அக்பர்அலி (வயது23). இவர் வேனில் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ–மாணவிகளை ஏற்றிச்சென்று தொண்டி பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவந்துள்ளார். இவ்வாறு கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் 9–ந் தேதி அக்பர்அலி வழக்கம்போல தனது வேனில் அந்த பகுதியில் உள்ள மாணவ–மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எதிரே வந்த லாரியின்மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் சென்ற நம்புதாளை போஸ்ட்ஆபீஸ்தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சரவணக்குமார் (வயது8), கோவிந்து மகள் பிரியா(4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அப்பாஸ் என்பவருடைய மகள் ஆர்த்தி(10) என்பவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த ஜீவிதா(5), சரவணப்பிரியா(15) ஆகியோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் சத்தியசீலன் அளித்த புகாரின் அடிப்படையில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் அக்பர்அலியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் சிறுவர்–சிறுமிகள் 3 பேர் பலியாவதற்கு காரணமான வேன் டிரைவர் அக்பர்அலிக்கு 7 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜரானார்.