பொன்னேரி பேரூராட்சியில் குப்பைகள் தேக்கம் பொதுமக்கள் அவதி

பொன்னேரி பேரூராட்சியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2018-01-07 23:00 GMT

பொன்னேரி,

பொன்னேரி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இங்கு சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கு பொதுவான இடம் இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு அளாகின்றனர். ஒரு சில பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை ஆரணி ஆற்றங்கரையில் கொட்டுவதால் ஆற்றுநீர் மாசடைகிறது.

பன்றிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த பேரூராட்சியில் உள்ள சின்னகாவனம், பெரியகாவகம், கள்ளுகடைமேடு, வேண்பாக்கம், கும்மங்கலம், தேவமாநகர், எம்.ஜி.ஆர்.நகர், துர்காநகர், ஆதிவாசிகள்காலனி, குன்னமஞ்சேரி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து குடிசை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். பேரூராட்யில் ஒரு சில பகுதிகளில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

பொன்னேரி பேரூராட்சியில் ரூ.72 கோடியே 90 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு 2013–ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை அந்த திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. மேலும் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அரசு நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்