கர்நாடகத்தில் பா.ஜனதா சார்பில் தமிழர்கள் போட்டியா? இல.கணேசன் எம்.பி. பதில்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் தமிழர்கள் போட்டியிடுவார்களா? என்பதற்கு இல.கணேசன் எம்.பி. பதில் அளித்துள்ளார்.

Update: 2018-01-07 21:00 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் தமிழர்கள் போட்டியிடுவார்களா? என்பதற்கு இல.கணேசன் எம்.பி. பதில் அளித்துள்ளார்.

இல.கணேசன் பேட்டி

பெங்களூரு கலாசிபாளையத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், சுமார் 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

விழாவில் தமிழக பா.ஜனதாவை சேர்ந்த இல.கணேசன் எம்.பி., பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பின்னர் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கர்நாடக சட்டசபையில் தமிழர் குரல்

குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் நடந்த தேர்தல்களின்போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, நிச்சயமாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். இன்றைய வருகை அதற்கான தொடக்கமாக கூட வைத்து கொள்ளலாம்.

கர்நாடகத்தில் தமிழர்களின் நலன் காக்கும் தலைவராக எடியூரப்பா உள்ளார். திருவள்ளுவர் சிலை நிறுவும் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கலைஞருடன் பேசி சுமூக தீர்வு கண்டவர் எடியூரப்பா. இதனால் தான் பெங்களூருவில் அய்யன் திருவள்ளுவரின் சிலையை காண முடிகிறது. இதனால் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு இருக்கும்.

தமிழக அரசியல் குறித்து விவாதிக்க விரும்பவில்லை. வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் தமிழர்கள் போட்டியிடுவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசிப்பேன். இறுதி முடிவை கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் எடுப்பார்கள். விரைவில் கர்நாடக சட்டசபையில் தமிழர் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எதற்காக பதற வேண்டும்?

எச்.ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:–

18 வயது நிரம்பியவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடலாம். பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கலாம். இவர்கள் அரசியலுக்கு வருவதால் சிலர் பதறுகிறார்கள். எதற்காக பதற வேண்டும். அவர்களை தலைவராக ஏற்று கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்வார்கள். இதில், தமிழக ஊடகங்கள் தேவையில்லாத விவாதங்களை நடத்தி வருகின்றன.

ஒழுக்கத்தை கற்று கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள் என அம்பேத்கர் கூறினார். ஆனால் திருமாவளவன் வக்கிரங்களை பரப்புகிறார். பயங்கரவாதிகளின் கைக்கூலியாக அவர் செயல்பட்டு வருகிறார். அவரை பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஓட்டுரிமை என்பது புனிதமானது. பெண்களுக்கு கற்பு எப்படியோ, அதேபோல் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை முக்கியமானது. ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும்.

பேச்சுவார்த்தை

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின்போது பெங்களூருவில் 18 தமிழ் கவுன்சிலர்கள் இருந்தனர். மும்பையில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் செல்வன் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுவது குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்