தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதியதில் சென்னையை சேர்ந்தவர் பலி

தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி சென்னையை சேர்ந்தவர் இறந்தார். தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-01-07 21:30 GMT

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவர் ஜோதி என்பவர் ஓட்டினார். அப்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு அரசு பஸ் ஆகியவற்றின் மீது மோதியது.

மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் (வயது 35), அவரது மகள் சாரன் சுவீட்டி (7) மற்றும் உறவினர் டேவிட் ஷியோன்குமார் (37) ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டேவிட் ஷியோன்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான டேவிட் ஷியோன்குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இந்த விபத்தை பார்த்து ஆத்திரமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தப்பி ஓடமுயன்ற தற்காலிக டிரைவர் ஜோதியை பிடித்து அவர்கள் தர்மஅடி கொடுத்தனர்.

விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அவர்களை சமாதானப்படுத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்