தூத்துக்குடி அருகே, ஆன்லைன் வர்த்தகத்தில் கார் ஸ்பீக்கருக்கு பதிலாக செங்கல் வந்தது

தூத்துக்குடி அருகே, ஆன்லைன் வர்த்தகத்தில் கூரியர் பார்சலில் வாங்கிய கார் ஸ்பீக்கருக்கு பதிலாக செங்கல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-07 21:00 GMT

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே, ஆன்லைன் வர்த்தகத்தில் கூரியர் பார்சலில் வாங்கிய கார் ஸ்பீக்கருக்கு பதிலாக செங்கல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் ஸ்பீக்கர்

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டை சேர்ந்தவர் வக்கீல் செல்வக்குமார். இவர், தனது காருக்கான ஸ்பீக்கரை ஆன்லைன் வர்த்தகம் மூலம் வாங்க முடிவு செய்தார். இதற்காக, அவர் ஆன்லைனில் கடந்த 1–ந் தேதி ஒரு ஸ்பீக்கர் வாங்க பதிவு செய்தார். நேற்று மதியம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து வந்ததாக ஒரு பார்சலை தனியார் கூரியர் நிறுவன ஊழியர், அவரிடம் கொடுத்தார். இதனால் செல்வக்குமார், ஸ்பீக்கருக்கான தொகை ரூ.5 ஆயிரத்தை செலுத்தி பார்சலை பெற்றுக் கொண்டார்.

பார்சலில் செங்கல்

பின்னர் அவர் அந்த பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது பார்சலில் உடைந்த செங்கல் இருந்தது. இதனை பார்த்த அவர்அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை.

உடனடியாக, அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவன அதிகாரியை அழைத்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து கூரியர் நிறுவனத்தை சேர்ந்தவர், பணத்தை அவரிடம் திருப்பி கொடுத்தார். இந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பெற்றுக் கொள்வதாகவும் கூரியர் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்