ஓய்வு இல்லாமல் அரசு பஸ்களை தொடர்ந்து இயக்கும் தற்காலிக ஊழியர்கள் விபத்து ஏற்பட வாய்ப்பு
ஓய்வு இல்லாமல் அரசு பஸ்களை தொடர்ந்து தற்காலிக ஊழியர்கள் இயக்கி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மண்டலத்தில் உள்ள 6 பணிமனைகளில் நேற்று 4–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் என 300–க்கும் மேற்பட்டவர்கள் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், வாகனங்களை இயக்குவதற்கு நல்ல அனுபவம் அவசியம் ஆகும். ஆனால், தற்போது அரசு பஸ்களை இயக்கும் தற்காலிக ஊழியர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. ஒரு டிரைவருக்கு ரூ.436–ம், கண்டக்டருக்கு ரூ.423–ம் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரூ.300 தினக்கூலி வழங்குவதாக தற்காலிக ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து தற்காலிக டிரைவர் ஒருவர் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அரசு பஸ்களை இயக்க ஆட்கள் தேவை என்று கூறியதன் பேரில் திரளானோர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கு நேர்காணலுக்காக வந்தோம். பி.எச்.டி. படிப்பு முடித்த ஒரு வாலிபரும் நேர்காணலுக்கு வந்தார். அப்போது தான் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஓட்டுனர் உரிமங்களை அதிகாரிகளிடம் காண்பித்து தற்காலிக பணியில் சேர்ந்தோம்.
அரசு பஸ்களை தொடர்ந்து நான்கு நாட்களாக இயக்கி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கப்படுவது இல்லை. உதாரணத்துக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்கு நள்ளிரவு 12 மணிக்கு வருகிறோம். பின்னர் திரும்பவும் அதிகாலையில் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். 8 மணி நேரத்துக்கும் கூடுதலாக பணிபுரியும் எங்களில் சிலருக்கு ரூ.300 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இது எங்களுக்கு போதாது. எனவே, தற்காலிக ஊழியர்களுக்கு போதிய ஓய்வும், தினக்கூலி அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அரசு தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். தற்போது தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்களை இயக்கி வருகின்றனர். ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள எந்தந்த பஸ்களை எப்படி ஓட்ட வேண்டும் என்பது ஏற்கனவே அதை ஓட்டி கொண்டு இருக்கும் டிரைவர்களுக்கு தான் தெரியும். மலைப்பாதையில் அனுபவம் இல்லாத தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்குகின்றனர். அவர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பஸ்களை இயக்க வலியுறுத்துவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசி பிரச்சினைக்கு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
கோவை கோட்டத்துக்கு உட்பட்ட நீலகிரி மண்டலத்தில் ஊட்டி–1, ஊட்டி–2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்–2 ஆகிய 6 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் 3 ஆயிரத்து 200 போக்குவரத்து ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் முன் அறிவிப்பு இன்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் நீலகிரி மண்டல போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தபால் மூலம் அவர்களது முகவரிக்கு நோட்டீசு அனுப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நோட்டீசு கிடைத்த 7 நாட்களுக்குள் போக்குவரத்து தொழிலாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.