ஊட்டியில் தொடர் உறைப்பனி பொழிவு: கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டியில் தொடர் உறைப்பனி பொழிவு நிலவுகிறது. கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-01-07 22:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் 2–வது சீசனாகவும் உள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த குளிர்காலத்தை அனுபவிக்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஊட்டியில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே நீர்ப்பனி பொழிவு காணப்பட்டது.

அதனை தொடர்ந்து ஊட்டியில் உறைப்பனி பொழிவு தொடங்கியது. இதனால் மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊட்டி குதிரை பந்தய மைதானம், ஊட்டி ரெயில் நிலைய வளாகம், எச்.ஏ.டி.பி. மைதானம், தாவரவியல் பூங்கா, கோல்ப் கிளப் மைதானம், தலைக்குந்தா, பைக்காரா, நடுவட்டம், பார்சன்ஸ்வேலி ஆகிய பகுதிகளில் புற்களின் மீது வெண்மையை போர்த்தியது போல் பனித்துளிகள் உறைந்து காணப்பட்டது.

ஊட்டியில் கடுங்குளிர் நிலவுவதால், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். அந்த நேரத்தில் உடல் வெப்பம் அடைந்தாலும், அதை விட்டு சிறிது தூரம் சென்றால் திரும்பவும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் வெம்மை ஆடைகளுடன் பொதுமக்கள் நகரில் வலம் வருகின்றனர்.

திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் உறைப்பனி படர்ந்து கிடப்பதை காண முடிகிறது. இதனால் அந்த வாகனங்களை காலை நேரத்தில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக என்ஜின் பகுதியை சூடாக்கி இயக்குகிறார்கள். இருசக்கர வாகனத்தின் சீட்டில் உறைப்பனி கட்டியாக உறைந்து விடுவதால், அதனை உடைத்து அகற்றும் நிலையும் உள்ளது.

ஊட்டியில் நேற்று 7 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாகவும், 21 டிகிரி செல்சியல் அதிகபட்ச வெப்பநிலையாகவும் பதிவானது. ஊட்டியில் தொடர் உறைப்பனி பொழிவால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்கிறவர்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தேநீர் கடையில் டீயோ அல்லது காபியோ வாங்கிய உடனேயே, அதன் சூடு குறைந்து விடுகிறது. வீடுகளில் வைக்கப்பட்டு உள்ள தண்ணீர் மிகவும் குளிராக இருப்பதால், அதனை சூடு பண்ண நீண்ட நேரம் பிடிக்கிறது. உறைப்பனி பொழிவின் மத்தியிலும் ஊட்டி கூட்ஷெட் சாலையோரத்தில் குதிரைகள் கூட்டமாக புற்களை மேய்ந்து கொண்டிருந்தன.

உறைப்பனி பொழிவால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புற்கள் கருகி வருகின்றன. அதில் இருந்து பாதுகாக்க தினமும் அதிகாலை நேரங்களில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மேலும் ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானம், குதிரை பந்தய மைதானத்தில் உள்ள புல்வெளிகள் கருக தொடங்கி விட்டன. வனப்பகுதிகளில் உள்ள புற்களும் கருகி வருவதால், காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்