வேலைநிறுத்தம் 4–வது நாளாக நீடிப்பு: 2,035 தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
சேலம் உள்பட 4 மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 2,035 தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அரசு போக்குவரத்து கழக அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம்,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று 4–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் மண்டலமான சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் பஸ் தொழிலாளர்கள் 4–வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4 மாவட்டங்களிலும் குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்புமாறு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அரசு பஸ் தொழிலாளர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மண்டலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், முன் அறிவிப்பின்றி பணிக்கு ஏன் வரவில்லை? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு உடனடியாக விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண் இயக்குனர் பாண்டி கூறியதாவது:–
சேலம் மண்டலத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தற்போது தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் மண்டலமான, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2,035 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.