ஊழியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் நீடித்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்களை கொண்டு 70 சதவீத பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 2 நாட்களாக பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று 70 சதவீத பஸ்கள் தற்காலிக ஊழியர்களை கொண்டு இயக்கப்பட்டன.
ஆனால் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களுக்கு பஸ்கள் ஓரளவு இயக்கப்பட்டன.
அதன்படி சிவகங்கை போக்குவரத்துக்கழக பணிமனையில் மொத்தம் உள்ள 63 பஸ்களில் 51 பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் காரைக்குடி பணிமனையில் உள்ள 63 பஸ்களில் 40 பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பத்தூர் பணிமனையில் மொத்தம் உள்ள 50 அரசு பஸ்களில் 32 பஸ்களும், திருப்புவனம் பணிமனையில் 45 பஸ்களில் 30 பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் நேற்று 70 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.