போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 4–வது நாளாக நீடிப்பு: பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2018-01-07 23:00 GMT

நாகர்கோவில்,

ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது.

குமரி மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததோடு, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள், ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.

இந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக நேற்றும் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலிக்கு வழக்கமாக இயக்கப்படும் இடை நில்லா பஸ்கள் நேற்று குறைவான அளவில் இயக்கப்பட்டன. இதுபோக மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கும் பஸ்கள் சென்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து சென்னைக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் கிராமங்களுக்கு குறைவான அளவே பஸ்கள் சென்றதால் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் முதல் 2 நாட்களில் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் எல்லை பகுதியான களியக்காவிளை வரை மட்டுமே வந்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு கேரள பஸ்கள் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று கேரள பஸ்கள் வழக்கம்போல அனைத்து பகுதிகளுக்கும் சென்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படவில்லை. ஆனால் இன்று (திங்கட்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவ–மாணவிகள் கூட்டமும், வேலைக்கு செல்பவர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பஸ்கள் ஓடாததால் அதை பயன்படுத்தி ஆட்டோக்கள் மற்றும் வேன்கள் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மக்களும் கூடுதல் கட்டணத்தை கொடுத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

மேலும் செய்திகள்