சாதி மோதலால் மராட்டியம் குழப்பத்தை நோக்கி பயணிக்கிறது சிவசேனா காட்டம்

‘‘சாதி மோதல் காரணமாக மராட்டியம் குழப்பத்தையும், அழிவையும் நோக்கி பயணிக்கிறது’’ என்று சிவசேனா தெரிவித்தது.

Update: 2018-01-06 22:00 GMT

மும்பை,

‘‘சாதி மோதல் காரணமாக மராட்டியம் குழப்பத்தையும், அழிவையும் நோக்கி பயணிக்கிறது’’ என்று சிவசேனா தெரிவித்தது.

இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

சிவாஜி சிலை நாசம்

வன்முறையை தொடர்ந்து தலித்துகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்துத்வவாத அமைப்புகள் பேரணி மேற்கொண்டனர். இதனை பார்க்கும்போது மராட்டியம் செழிப்புக்கு பதில், சாதி மோதல் காரணமாக குழப்பத்தையும், அழிவையும் நோக்கி பயணிப்பதாக தெரிகிறது.

பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான பரிபா பகுஜன் மகாசங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பு, அமைதியாக முடிவடைந்து இருந்தால், ஒரு தலைவராக அவரது அந்தஸ்து உயர்ந்திருக்கும். தற்போது அவரது ஆதரவாளர்கள் வழிகாட்டி இல்லாமல் தவிக்கிறார்கள். கோலாப்பூரில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை நாசப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரூ.25 கோடி இழப்பு

மராட்டியத்தின் பெருமையையும், சட்டம்– ஒழுங்கையும் பராமரிக்க சிவசேனா விரும்புவதால், சாதி மோதல் என்று ஒரு இக்கட்டான சூழல் வரும்போது முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் சகோதரத்துவத்தை சிவசேனா வெளிப்படுத்தும்.

முழு அடைப்பின்போது தலித் உறுப்பினர்களின் கோபத்தை தணிப்பதில் தலித் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனை கேட்கும் மனநிலையிலும் தலித் உறுப்பினர்கள் இல்லை. வன்முறை காரணமாக போக்குவரத்து துறைக்கு மட்டும் ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சாதி மோதலால் பயன்பெறுவது பாரதீய ஜனதாவா? அல்லது வேறு பிற கட்சிகளா? என்று ஆய்வுசெய்வதற்கு இது சரியான தருணம் அல்ல. எனினும், சமீபத்திய நிகழ்வுகள் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்