‘மராட்டியத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் நலமுடன் இருக்கிறது’ தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

மராட்டியத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் நலமுடன் இருப்பதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Update: 2018-01-06 23:00 GMT

மும்பை,

மராட்டியத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் நலமுடன் இருப்பதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

புனே மாவட்டம் பீமா– கோரேகாவ் போர் நினைவுச்சின்னம் அருகே கடந்த 1–ந் தேதி இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், மராட்டியம் முழுவதும் வன்முறை வெடித்தது. இதனால், ஒட்டுமொத்த மாநிலமே அமைதியை இழந்து ஸ்தம்பித்தது. வன்முறைக்கு இரண்டு பேர் பலியாகினர்.

குறிப்பாக மும்பையில் பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இன்றைக்கு மராட்டியத்தில் சட்டம், ஒழுங்கு நலமுடன் இருக்கிறது. இதில், எந்தவொரு பிரச்சினையும் இல்லை’’ என்று கூறினார்.

தொழில் முதலீட்டு மாநாடு

மேலும், மராட்டியத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, மும்பையில் அடுத்த மாதம் 3 நாள் மாநாடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். பிப்ரவரி 18–ந் தேதி தொடங்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மராட்டியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து கருத்து தெரிவித்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ‘‘இப்போதைக்கு மராட்டியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 400 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதற்கு இங்கு நடைபெறும் தொழில்கள் சான்று. தொழில் அதிபர்களை யாரும் சிரமப்படுத்துவது இல்லை. இது தான் மராட்டியத்தின் பலம். மராட்டிய மக்கள் தான் மராட்டியத்தின் வலிமை’’ என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் செய்திகள்