செய்யூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேருக்கு வலைவீச்சு
செய்யூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த வீரபோகம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). இவரது மகன் கவாஸ்கர். பி.டெக் வரை படித்துள்ளார். சூனாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (52). இவரது மகன் கவுதம். கம்ப்யூட்டர் பிரிவில் டிப்ளமோ முடித்துளார். கருணாநிதி மற்றும் தேவேந்திரன் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு அரசு வேலை கேட்டு அதே பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்களான ஆறுமுகம் (45) மற்றும் அவரது நண்பரான குன்றத்தூரை சேர்ந்த சக்தி (47) ஆகியோரை அணுகியதாக கூறப்படுகிறது.
ஒரு நபருக்கு தலா ரூ.4 லட்சம் கொடுத்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். முன் பணமாக ரூ.2 லட்சம் தரவேண்டும். பணியில் சேர்ந்த பிறகு ரூ.2 லட்சம் கொடுத்தால் போதும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
போலி பணி நியமன ஆணை
இதை நம்பிய கருணாநிதி ரூ.1 லட்சமும் தேவேந்திரன் ரூ.1½ லட்சமும் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 மாதம் கழித்து கருணாநிதியிடம் மேலும் ரூ.1 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து கவாஸ்கர் மற்றும் கவுதம் ஆகியோரின் சான்றிதழ், புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வாங்கி சென்றதாக தெரிகிறது.
அதன் பின்னர் முறையான தகவலை அவர்கள் கூறவில்லை.
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் அண்ணா பல்கலைக்கழக போலி பணி நியமன ஆணைகளை கொடுத்துள்ளனர். மேலும் தற்போது பணி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் காத்திருங்கள் என கூறிவிட்டு சென்று விட்டனர்.
வேலை கிடைக்காததால் அவர்களை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி கருணாநிதி கேட்டார். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கருணாநிதி சூனாம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆறுமுகம், சக்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.