மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மூதாட்டி அடித்துக்கொலை பேரன் கைது

திருக்கடையூர் அருகே மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-06 23:00 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மாமாகுடி கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி அஞ்சலை (வயது 70). இவர்களது மகள் கலாவதி. கலாவதியின் மகன் வேல்முருகன்(31). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர். இந்நிலையில் வேல்முருகன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அவரது தாய் கலாவதியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபால் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதனை பாட்டி அஞ்சலை தட்டி கேட்டார். இதனால் வேல்முருகனுக்கும், அஞ்சலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வேல்முருகன், அஞ்சலையை கட்டையால் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அஞ்சலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அஞ்சலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்டியை கட்டையால் அடித்துக்கொன்ற வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்