பழனி பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சை இயக்கவிடாமல் தடுத்த டிரைவர்கள் 2 பேர் கைது
பழனி பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சை இயக்கவிடாமல் தடுத்த அரசு பஸ் டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி,
தமிழகம் முழுவதும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பழனியில் இருந்து, வெளியூர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், நேற்று மாலை பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் இயக்கப்படும் பஸ்களின் டிரைவர்களான பழனியை அடுத்த கீரனூரை சேர்ந்த கண்ணன் (வயது 42), ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அலங்கியத்தை சேர்ந்த எல்லத்துரை (48) ஆகியோர் பழனி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள், பழனி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு புறப்பட்ட ஒரு தனியார் பஸ்சை மறித்து டிரைவருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பஸ்சை தொடர்ந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறினர். இதற்கிடையே அங்கு வந்த பழனி நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் அவர்களை தடுத்தார். அப்போது அவரிடமும் கண்ணனும், எல்லத்துரையும் தகராறு செய்தனர்.
மேலும் பஸ்களை இயக்கவிடமாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 2 பேரும் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டனர்.