வீட்டின் பூட்டை உடைத்து 24 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 24 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-06 23:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அண்ணாவி நகரை சேர்ந்தவர் ஆதியான். அங்குள்ள இவருடைய பூர்வீக வீட்டில் நடராஜன், மாரிமுத்து உள்ளிட்ட அவருடைய 3 மகன்கள் வசித்து வருகின்றனர். வீட்டில் அனைவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளன. இந்நிலையில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து மாரிமுத்துவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாரிமுத்து மற்றும் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாரிமுத்து தனது அறைக்கு சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் 16 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. மற்றொரு அறையில் 8 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணரும் வர வழைக்கப்பட்டு, கைவிரல் ரேகைகளை பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மணப்பாறை அண்ணாநகர் குடியிருப்பு நிறைந்த பகுதி. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்