நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

என்.எல்.சி. இந்தியா நிறுவன விருந்தினர் இல்லத்தில் தனியார் ஒப்பந்ததாரரிடம் 16 பேர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

Update: 2018-01-06 22:00 GMT

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவன விருந்தினர் இல்லத்தில் தனியார் ஒப்பந்ததாரரிடம் 16 பேர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.486 வழங்கியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.359 கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜீவா ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி தொழிலாளர் நல ஆணையருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை 6 மணி முதல் பணியை புறக்கணித்து விருந்தினர் இல்ல நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் என்.எல்.சி. மனித வளத்துறை அதிகாரி குருமூர்த்தி மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இந்த பிரச்சினை தொடர்பாக புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், அது வரை ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் பெறாமல் வேலை செய்ய வேண்டும் என்றனர். அதற்கு தொழிலாளர்கள் சம்மதம் தெரிவித்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்