கோவை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்தம்

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 3–வது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். பணிக்கு திரும்பாதவர்களுக்கு நோட்டீசு அனுப்பவும் போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது.

Update: 2018-01-06 22:30 GMT

கோவை,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 3–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 18 பணிமனைகளில் உள்ள ஆயிரத்து 200 பஸ்களில் நேற்று ஏறத்தாழ 250 பஸ்கள் தான் இயக்கப்பட்டன. 80 சதவீத பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

காலை மற்றும் மாலைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பஸ் கிடைக்காமல் திண்டாடினார்கள். குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகள் அரசு டவுன் பஸ்களை எதிர்பார்த்து நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் அந்த பஸ்கள் வராததால் தனியார் பஸ்களில் பணம் கொடுத்து சென்றனர்.

கோவை புறநகரில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் வேலைக்கு வருபவர்கள் பஸ்கள் கிடைக்காததால் சரக்கு வேன்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

பஸ்கள் ஓடாததால் சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், உக்கடம் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதில் கூட்டம் அலைமோதியது. ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோவை உழவர் சந்தைக்கு மேட்டுப்பாளையம், ஊட்டி கூடலூர், குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள். அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கோவை வந்த பயணிகள் பஸ் கிடைக்காமல் சாய்பாபா காலனியில் உள்ள பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இந்த நிலையில் பணிக்கு திரும்பாத அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு நோட்டீசு அனுப்ப போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான கடிதங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் உரியவர்களுக்கு அனுப்பப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்