போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டத்தில் ஈடுபடும்

வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று மாவட்ட தொடர்பாளர் ராஜாமணி தெரிவித்தார்.

Update: 2018-01-06 23:00 GMT
வேலூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ -ஜியோ) வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட குழு மாவட்ட தொடர்பாளர்கள் ராஜாமணி, தாண்டவராயன், மணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ராஜேஸ்கண்ணா வரவேற்றார். மாநில தலைமை குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பேராசிரியர்களுக்கு ஊதிய மாற்ற உத்தரவினை அமல்படுத்திட வேண்டும். உச்சவரம்பின்றி அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஜாக்டோ-ஜியோ மாவட்ட தொடர்பாளர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்