சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
கடன்கள்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்களுக்கான கல்விக்கடன், தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்கான கடன், கறவை மாடு கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த வாய்ப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைந்திடலாம்.
சிறப்பு முகாம்தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருகிற 10–ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், திருச்செந்தூரில் திருச்செந்தூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வருகிற 11–ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
அதேபோல் கோவில்பட்டியில் வருகிற 12–ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.